8. Suvar_Short story_Jansi

“ம்ம்..க்க்..ம்ம்”  

சுகந்திக்கு அந்த சத்ததிலேயே என்னவென்று புரிந்து விட்டிருந்தது. அவரது கணவரது சப்தம் தான் அது, அவர் தனது இயற்கை உபாதையை கட்டிலில் கழித்திருந்தார். 

அந்த சின்ன ஒலி கேட்ட மாத்திரமே “இதோ வரேங்க” என்றவராக ஒரு நொடியும் தாமதிக்காமல் வீட்டின் உள்ளே சென்ற சுகந்தி முதலில் கணவரது உடையை மாற்றி, சுத்தமான துணி அணிவித்து அடுத்து வீட்டை பினாயில் போட்டு சுத்தம் செய்து முடித்தார். அதன் பின்னர் பின் கட்டில் பீத்துணியை கொண்டு போய் அலசி காய வைக்கும் முன்பாக சில மணித்துளிகள் கடந்திருந்தன.

மரியாவின் மருமகளின் வருகைக்குப் பின்னர் தான் பக்கத்து வீட்டின் பின் வாசல் பக்கம் சப்தங்கள் கேட்கத் தொடங்கி இருந்தன. அவ்வீட்டின் புது மருமகள் செல்வி பாழடைந்துக் கிடந்த வீட்டின் பின்வாசல் பக்கத்தை ஒவ்வொன்றாய் சுத்தம் செய்ய ஆரம்பித்து இருந்தாள் போலும். ஜல் ஜல்லென ஒலிக்கும் அவளது கொலுசு சப்தத்தில், துறுதுறுவென்று வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் திறத்தில் மிக சுறுசுறுப்பான நல்ல பெண் தான் என இவர் மனதில் நினைத்துக் கொண்டார்.

தமது வேலையின் நடுவே அந்தப் பக்கம் சுகந்தி எட்டிப் பார்த்தாலும் அவர் ஒருபோதும் செல்வியோடு பேசியதில்லை, தனது கணவரை முழுமூச்சாய் கவனிக்க வேண்டி இருந்ததில் அவரிடம் அதற்கு நேரமும் தான் இல்லை. சுவற்றின் இந்தப் புறம் நிற்கும் இவரிடம் அவ்வப்போது செல்வி புன்னகைத்துச் செல்வாள். 

இரு குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லை என்பதையெல்லாம் பொருட்படுத்தாதவளாக செல்வி அன்று முதன் முறையாக தன் வீட்டுச் சுவற்றிலிருந்து எக்கிப் பார்த்து இவரிடம் பேசினாள்.

“சுகந்தி மாமி, நல்லாயிருக்கீங்களா? நீங்கதான் என் மாமியாருக்கு பிரண்டாம் அப்படியா?” என்று கேட்டிருந்தாள்.

கணவனின் பீத்துணியை தோய்த்துக் கொண்டிருந்த சுகந்திக்கு அந்த சுட்டிப் பெண்ணின் பேச்சில் புன்னகை வந்தது. 

செல்வியை எட்டிப் பார்த்தவர் அதிராத குரலில் அன்பாக இவள் கேள்விக்கு பதில் சொல்ல மரியாவைக் குறித்த சில நினைவலைகளோடு அதற்கு அவளது கலகல பதில்களோடு பேசிக் கொண்டிருந்த தருணம் சுகந்திக்கு தனது வீட்டிலிருந்து ஏதேதோ சப்தங்கள் கேட்கவும் “வரேன்மா”என்றவராக வீட்டிற்குள்ளாக கணவரின் தேவையை கவனிக்க ஓடிச் சென்று இருந்தார்.

இவ்வாறு அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டு இருந்த போதும் சுகந்தியாக ஒரு போதும் அவளிடம் பேச்சை ஆரம்பித்தது இல்லை. இவர்கள் பின்கட்டில் பேசுவது முன் வீட்டில் புழங்குகின்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை எனினும் கூட இருவரும் அடக்கியே வாசித்தார்கள் எனலாம்.

அப்படி இருந்த பட்சத்தில் ஒரு நாள் சுகந்தியாகவே செல்வியிடம் பேசவும் நேர்ந்தது.

“என்னாச்சும்மா? ஒரு வாரமா ஆளையே காணோம்?”

கனிவாக தன்னை விசாரித்தவரிடம் பேசும் முன்பே செல்வியின் கண்களினின்று நில்லாமல் கண்ணீர் பொழிந்தது.

“அம்மா, என் அம்மா தவறிட்டாங்க மாமி”

“அச்சோ” சுகந்தியின் உள்ளம் செல்வியின் பால் உருகியது. செல்வியின் திருமணத்தன்று நடக்க பலனற்றவர் போல வெளிறியத் தோற்றத்தோடு, சற்று கூனோடு கடந்துச் சென்ற பெண்ணைக் “இதுதான் பெண்ணோட அம்மா” என பக்கத்து வீட்டுப் பெண்கள் காட்டி இருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!