8. Suvar_Short story_Jansi

“உங்க வீட்டில நீ ஒருத்திதானாமா?”

“இல்ல… தம்பி…”

“தம்பி எங்க இருக்கான்?”

“தம்பி…” அவள் சொல்ல ஆரம்பிக்கவும் உள் வீட்டின் முனகல் சப்தம் சுகந்தியை அடைந்து விட்டிருந்தது.

“அழாதம்மா, நீ அழுதா அம்மாவோட ஆத்துமாக்கும் வருத்தமா இருக்கும் இல்லையா? அழாத கண்ணே”

“ம்ம்..க்க்..க்க்க்”, வீட்டினுள்ளே இருந்து சப்தம் வர,

“கொஞ்ச நேரத்தில வந்து பேசுறேன்மா”

அதன் பின்னர் அந்த கொஞ்ச நேரத்தில் பேச இரு பெண்களுக்கும் வாய்ப்புக்களே கிடைக்கவில்லை.

அடுத்தடுத்த சில மாதங்களில் இரண்டு வீட்டிலும் சில பல மாறுதல்கள் நிகழ்ந்திருந்தன.

செல்வியின் மாமனார் தங்களுக்கு இருந்த மற்ற வீட்டிற்கு சின்ன மகனோடு சென்று விட்டிருக்க, செல்வியின் கணவனின் குரல் முன்பெப்போதும் இல்லாத வகையில் அந்த வீட்டில் எப்போதும் அதிகாரமாக ஒலித்துக் கொண்டே இருந்தது.

அக்கம் பக்கம் இந்த இரண்டு வீடுகள் இருப்பது தவிர்த்து மற்ற வீடுகள் அருகில் இல்லை என்பதனால் இந்த குரல்கள் உள்ளுக்குள்ளேயே எதிரொலித்தனவே தவிர வெளியாட்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை எனலாம்.

“ஏன் தேxxயா, உங்கப்பன் கூட இருந்து, என் அப்பன் கூட இருந்து இப்ப என் தம்பியையும் உனக்கு கேட்குதோ? எதுக்குடி இன்னிக்கு அவன் கூட நீ பேசின?”

“ஏங்க இப்படி அபாண்டமா பேசுறீங்க? உங்க தம்பிக்கு சாம்பார் தாங்க கொடுத்தேன்”, செல்வியின் அவமான அழுகுரல் சுகந்தியின் உள்ளத்தை உலுக்கி பல்வேறு ஞாபகங்களுக்கு இட்டுச் சென்றன.

“ஓஹோ, இதெல்லாம் எத்தனை காலமா நடக்குது தேxxயா”

“ஏங்க இப்படி பேசாதீங்க, அசிங்கமா இருக்கு”

“ஏன் பேசக் கூடாது, நான் பேசுவேனே, தேxxயா, தேxxயா தேxxயா, எங்கப்பனையே நீ விட்டு வைக்கலின்னா அப்புறம் உன்னை என்னச் சொல்ல?”

பக்கத்து வீட்டின் ஆங்காரக் குரலில் சிலையென சமைந்திருந்த சுகந்தியை

“அம்மா அப்பாக்கு என்னச் செய்யுது பாருங்க” என்ற மகளின் அலறல் உலுக்கியது. பின்கட்டில் ஏதோ எடுக்க வந்திருந்தவர் மகளின் கூச்சலில் தனது தள்ளாமைக்கு முடியாமலும் கூட பரபரத்து ஓடோடிச் சென்றார்.

தகப்பனுக்கு மிகவும் உடல் நிலை சரியில்லை என அறிந்ததும் அன்று பக்கத்து ஊரில் கட்டிக் கொடுத்திருந்த சுகந்தியின் மகள் கணவனோடு வந்திருந்தாள். வந்த நேரம் அவரை மிக பலவீனமாக காணவும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து ஒரு வழியாக அவரது உயிரை மீட்டிருந்தனர். 

அவருக்கு சற்று பரவாயில்லை என்றானதும் சுகந்தியின் மகளும் தனது வீட்டிற்கு சென்று விட்டிருந்தாள். இப்போது அந்த வீட்டில் வேறு யார் துணையுமின்றி மறுபடியும் சுகந்தியும் அவரது கணவரும்.

சமையலறை ஒட்டிய அந்த பின்கட்டில் சுகந்தி இருக்கும் போது எல்லாம்  செல்வியின் கணவனின் குரல்கள் முன்பை விடவும் உக்கிரமாகவும் ஒலிப்பதை அவரால் கேட்க முடிந்தது.

“இந்த புள்ள எப்படி உண்டான? இது யாரோடது? யாரோடதுன்னு சொல்லுடி?”

அப்பக்கம் சட் சட்டென அடிக்கும் சப்தம் கேட்ட போதும், செல்வியின் அழுகைக் குரல் கேட்ட போதும், சுகந்தி கையாலாகாதவராக அச்சுவற்றின் இப்பக்கம் முடங்கிப் போனார்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!