“ரொம்பவே நல்லா ஞாபகம் இருக்கு அப்பம்மா…எப்ப கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் பொண்டாட்டியா வர்றவளை மனுசியா மதிக்கணும், நல்லா பார்த்துக்கணும்”
“ம்ம்ம், நான் இல்லாத காலத்திலயும் இது உனக்கு ஞாபகம் இருக்கணும், இதுக்காகத்தான் இந்த ஊரில நான் உன்னை வளர விடலை. உன் மாமா நல்ல குணம், அவரை பார்த்து வளருவன்னு தான் நான் அங்க உன்னை அனுப்பிச்சு வச்சேன்.”
“நீங்க என் கல்யாணமும் பார்த்து, புள்ளை கல்யாணமும் பார்ப்பீங்க அப்பம்மா” அவரது கன்னத்தில் முத்தமிட்டான்.
“என் கண்ணு ராசா, என் ஆயுள் எவ்வளவோ அது கடவுள் சித்தம், நீ நல்ல நீண்ட ஆயுளோட இருக்கணும்” நெட்டி முறித்தார்.
அனைவரும் சென்ற பின்னர் கணவனில்லாத வெற்று வீட்டில் தனிமையில் மூழ்கிய சுகந்திக்கு பக்கத்து வீட்டுக் குட்டைச் சுவற்றிலிருந்து வந்த குரல்கள் அங்கு என்ன நடந்துக் கொண்டு இருக்கின்றன என தெரிவித்துக் கொண்டே இருந்தன.விதம் விதமாக செல்வி அங்கு வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தாள்.
இதோ செல்வி தன் வீட்டை விட்டுச் சென்று இரண்டு வாரங்களாகி இருந்தன. அக்கம் பக்கம் வீட்டினர் அவளைக் குறித்து புறணி பேசி ஓய்ந்து இருந்தனர்.
அந்த குட்டைச் சுவற்றின் அந்த பக்கம் திடீரென சில பரபரப்புகள் எழுந்தன. “ராஜன் செத்துப் போய் நடு வீட்டில கிடக்கான், ஈ மொச்சு கிடந்தது. எறும்பு அவன் வாயெல்லாம் தின்னுடுச்சாம்”
ஆளற்ற வீட்டில் எப்போது இறந்தானென தெரியாதவனாக பிணமாய் நாறிக் கிடந்தான் அவன்… அவன் தான் செல்வியின் கணவன்.
எப்படியோ செல்விக்கு தகவல் போய் சேர்ந்திருக்க, தாயின் வீடு மற்றும் சொத்து விசயமாக மாமனாரிடம் சொல்லியே தாய் வீட்டிற்குச் சென்று இருந்தவள் பதறி அடித்து திரும்ப வந்தாள். கணவனை அந்த நிலையில் கண்டு கதறி அழுது துடித்தாள். அவள் மனதின் அப்பழுக்கற்ற அந்த அன்பு அவனுக்காக இன்னமும் மீதம் கிடந்தது போலும். ராஜனின் மரணத்திற்கு பிறகு செல்வியை தனியாக விட மனமின்றி அவளது மாமனாரும் கொழுந்தனும் அந்த வீட்டில் மறுபடி குடி வந்தனர். அதன் பின்னர் சில மாதங்கள் கடந்திருந்தன.
செல்வியின் மாமனார் எதனாலோ தனது பூர்வீகமான அந்த ஊரை விட்டுச் செல்வதாக முடிவெடுத்து இருந்தார்.அடுத்த சில மாதங்களில் தங்களது சொத்துக்களை எல்லாம் விற்று செல்விக்கு நியாயமாக சேர வேண்டிய அளவிலான ஒரு பாகம் கொடுத்து தாம் தம் இளைய மகனுடன் ஊரை விட்டுச் சென்றிருந்தார்.


Leave a Reply