Epi 15_Thurathum Nizhalgal_Jansi

வீட்டுக்கு வந்து மகளை, மனைவியோடு கையில் ஏராளமான பணத்தோடு தனக்கு தெரிந்த குறிப்பிட்ட இடத்திற்கு போக வழியனுப்பினார். நடு இரவில் தூங்கிக் கொண்டிருந்த ரிஷாவை எழுப்பி அவளுடைய துணிகளை எல்லாம் பெட்டியில் பூட்டி, தனக்கும் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு பின்வாசல் வழியாக வெளியேறி இருந்தனர். ரிஷா அன்று ட்யூசன் இல்லையென்று சீக்கிரமே சாப்பிட்டு உறங்கி விட்டிருந்ததால் அவளுக்கு நிகழ்ந்தவை எதுவுமே தெரியாமல் போயிற்று.

தன் அக்கா மகன் இறந்த இந்த தருணத்தில் சண்முகம் அங்கே இருக்க வேண்டிய சூழல் இருந்ததால், தன் மகளை மனைவியோடு அனுப்பி வைத்தார். 

தன் அக்கா மகன்களின் கோபமும், வன்மமும் அவர் அறியாதது போல, அவர் நடந்துக் கொள்ள வேண்டியதிருந்தது. அப்படி நடந்துக் கொள்ளும் வரைதான் அவரது மகளுக்கு பாதுகாப்பு என அவர் உணர்ந்து இருந்தார். 

வெறிக் கொண்டு அலைபவர்களிடம் போய் உண்மையோ, சித்தாந்தமோ பேசுவது சரிவராது என புரிந்துக் கொண்டிருந்தார். அவர்களோடு சேர்ந்து அவரும் சுந்தரின் மரணத்திற்கு துக்கம் கொண்டாடினார். 

செல்வியை, ரிஷாவை தேடியவர்களிடம் செல்வியின் ஊரில் ஒரு துக்கம் நிகழ்ந்துள்ளதால் செல்வி ஊருக்குச் செல்ல, ரிஷாவும் அம்மாவோடு அங்கே சென்று விட்டதாக கூறிவிட்டார்.

அரங்கநாதனும், சந்திரனும் மட்டுமன்றி அவர்கள் மனைவியரும் தங்கள் சுந்தரின் மரணத்திற்கு ரிஷாவை பழி தீர்க்க வெறியோடு காத்திருந்தனர்.

தன்னுடைய தொழில் முதலாக எல்லாவற்றையுமே சென்னையில் வைத்துக் கொண்டு உடனடியாக அந்த நகரை விட்டுச் செல்ல முடியாத சூழலில் சண்முகம் இருந்தார். 

முன்பு எப்போதும் தனியாக எதையும் சமாளித்து இராத செல்வி தன்னுடைய மகளுக்காக தெரியாத இடங்களில் பயணித்தார். மகளை காக்கும் தாய்ப்பறவையாக துணிந்து முன்னெடுத்தார்.

அப்போது அவர்களிடம் வேறு எந்த வாய்ப்புமே மிச்சமில்லை. தன்னுடைய மகளை உயிரோடு காத்துக் கொள்ள வேண்டுமானால், அவளை அந்தக் கொடியவர்கள் கண்முன் இருந்து பாதுகாப்பது தவிர வேறு எந்த வழியுமே அவள் பெற்றோருக்கு தென்படவில்லை. 

மொழி தெரியாத பல பல மாநிலங்கள் கடந்து, இறுதியாக சண்முகத்தின் நண்பர் ஒருவரின் துணையால் டார்ஜிலிங்கில் ஸ்கூலில் ரிஷாவிற்கு அட்மிஷன் பெற்றார்கள். 

செல்வி ரிஷாவிற்கான சில ஏற்பாடுகள் செய்து முடித்ததும், சண்முகம்  அவர்களை தேடி வந்தார். செல்வியோ விருப்பமே இல்லாதவராக தன் கைக்குள் பொத்தி வைத்து வளர்த்த மகளை தகப்பன் பொறுப்பில் விட்டுவிட்டு ஊர் திரும்பினார்.

அதன் பின்னர் சண்முகம் அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதிப்படுத்தி விட்டு, தேவையானவை செய்து விட்டு ஷாரதாவின் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு அவரும் சென்னை திரும்பினார்.

எல்லோரிடமும் மகளை வெளி நாட்டில் படிக்க வைப்பதாகச் சொல்லி பரப்பினர்.

ரிஷா இப்போது…..

தன் முன் கதையை புரிந்துக் கொண்டிருந்தவளின் உடல் இப்போது பயத்தில் சில்லிட்டு இருந்தது. 

Pages: 1 2 3 4 5 6 7 8 9


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!