அதற்கு தன்னைக் கடத்தியவர்களின் கோர முகம் வெளிப்பட்டதே காரணம். இத்தனைக் காலம் அவள் அறியத் துடித்தது இதுவா?
தன்னிடம் அன்பும் பாசமும் கொட்டியவர்கள்தான் தன்னைக் கொல்ல தேடி இருக்கிறார்கள் என அறிந்தபோது எப்படி உணர்ந்தாள் என்றே சொல்ல முடியவில்லை.
அதுவும் அந்த சுந்தர், ஆண்களென்றாலே தனக்கு வெறுப்பு வருமளவும் தன்னை அசிங்கமாய் நடத்திய சுந்தர் அவன் இறந்து விட்டானா? அவன் இறப்பை ஏதோ தியாகம் போல உருவகித்துக் கோண்டு இருக்கும் அவன் அண்ணன்களைக் கண்டு அவள் மனம் அருவருத்தது.
உங்களுக்கெல்லாம் பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாய் போயிற்று இல்லையா? ஒன்று பதின் வயது பெண்கள் இவர்கள் சொன்னதும் காதலுக்கு தலையசைக்க வேண்டும், இல்லையென்றால் வெட்ட வரும் போது இதோ வெட்டிக் கொள் என்று கழுத்தைக் கொடுக்க வேண்டுமா ச்சீய் ஈனப் பிறவிகள்… மனதிற்குள்ளாக சீறினாள்.
தான் புது பட்டுப்புடவை சரசரக்க அங்கு வந்த போது அவள் கண்டவை என்ன?
ஒரு கலசத்தில் அஸ்தியும், பக்கத்தில் பெரிதாய் துருப்பிடித்ததொரு கத்தியும், பெரிதாய் ப்ரேமிட்ட சுந்தரின் புகைப்படமும், அதற்கு இட்டிருந்த மாலையும்தான்.
தான் மிக வெறுத்த ஒருவனாகினும், அவன் இறந்திருப்பான் என்று அவள் எண்ணி இருந்திருக்கவில்லை, அப்படியே இருந்தாலும் இறந்துப் போன ஒருவனோடு நமக்கு திருமணமா? அந்த அதிர்ச்சியில் தான் அவள் அப்போது மயங்கிச் சரிந்தது.
இப்போதோ தன்னை துரத்திய உண்மைகள் தெரிந்த பின்னர் ரிஷா முன்பைவிட சற்று தெளிவாகி இருந்தாள், உடல் சோர்வு தந்த களைப்பு ஒருபுறம் இருந்தாலும் கூட, மயக்கம் சிறிது சிறிதாக தெளிந்துக் கொண்டிருந்தது.
தன் மகளை காத்துக் கொள்ளவும் வேண்டும், அதே நேரம், அவளை அழிக்கத் துடிக்கும் தன் அக்கா மகன்கள் நடவடிக்கை என்ன என்று அறிந்துக் கொள்ளவும் வேண்டும் என்பதால் நட்பு பாராட்டி, அவர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அம்மாவும், அப்பாவும் அதே இடத்தில் இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறார்கள் என புரிந்தது.
அம்மாவும், அப்பாவும் தனக்கு சொல்லாமல் விட்டிருந்த விஷயங்கள் புரிந்தன. அவருக்கு தன் அக்கா குடும்பம் எவ்வளவு மனதிற்கு நெருக்கமானது என்று அவள் அறிந்தே இருந்திருக்கிறாள். அவர்களை முன்னேற்ற இவர் என்னவெல்லாம் அவர் செய்தார் என்பதையும் அவள் அறிவாள்.
அதற்கு ஈடாக அவர்கள் தந்தது என்ன? ச்சீ இவர்கள் ஈனப்பிறவிகள். மறுபடியும், மறுபடியும் அவர்களை எண்ணி அருவெறுத்தாள். ஐந்தறிவு மிருகமாயினும் நாய் கூட இவர்களை விட பன்மடங்கு உயர்ந்தது, நாய் மட்டுமா சிறு புழுவினும் கேவலமானவர்கள் இவர்கள்.
அவள் அத்தனை நேரம் எதற்காக இந்த ஓட்டம்? என்று தெரியாமல் ஓடினாலும் கூட அம்மா, அப்பாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே ஒவ்வொரு நேரமும் அவளை உந்தி தள்ளிக் கொண்டு இருந்தது. அது இப்போது இன்னும் வலுப் பெற்றது.


Leave a Reply