தான் செய்தது சரிதான் என்று கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டு, வருந்திய தன் மனதை தேற்றிக் கொண்டு எழுந்தார் அந்த இரும்பு மனிதர். அங்கு பிணத்தை எரியூட்டுவதற்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து, செய்ய வேண்டிய மீதி வழி முறைகளை நிறைவு செய்து விட்டு ஏனோ நேர் வழியாக வராமல் பின்புறமாக சுற்றி வெளியில் வந்து கொண்டிருந்தார்.
துயரத்தின் காரணமாக மிக மெதுவாக நடை பயின்று வந்தார். அப்படி வந்தபோது தான் தான் வளர்த்து விட்ட இரு நயவஞ்சக நரிகள் பேசுவதை அவர் கேட்க நேரிட்டது. முன் வாயில் வழி வந்திருந்தால் ஒருவேளை அப்பேச்சை தவற விட்டிருப்பாரோ?
அங்கு கையில் தம்பியை சாம்பலாய் ஏந்திக் கொண்டிருந்த அரங்கநாதனும், சந்திரனும் பேசிக் கொண்டிருந்தனர்.
“முறையா தகனம் செய்ய கூட விடலியே அண்ணா, இவருக்கு நாம இத்தனை காலம் உழைச்சதுக்கு இதுதானா பலன்?”, கொதித்துக் கொண்டிருந்தான் சந்திரன்.
“தம்பி கொஞ்ச நேரம் முன்னாடி என் மடியில படுத்துக்கிட்டு, இதோ இந்த மடியிலதான்…” வேகமாய் தன் தொடைகளை அறைந்தவன், “நம்ம கிட்டே என்ன சொன்னான் உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல சந்திரா?” தளுதளுத்துக் கேட்டான் அரங்கநாதன்.
“ஆமான்னா அவனுக்கு வாழனும்னு சொன்னான், ஆனா செத்துப் போயிட்டான்” சந்திரனின் கண்களிலிருந்து கண்ணீர் ஓடியது, துடைத்துக் கொண்டான்.
“நீ கூட கொஞ்சம் பெரிய பையன், பசி பொறுத்துப்ப. ஆனா, அவன் பசியில அழுதுட்டே இருப்பான். அவனை மார்லயும், தோளில தூக்கிக்கிட்டே அலைவேன்டா நான்.”
தன் மாரிலேயும் ஓங்கி அறைந்தான். “எத்தனை காலம் வாழ வேண்டியவன்டா அவனை இப்படி சாம்பலா பார்ப்பேன்னு நான் நினைக்கலியேடா? ஏன்டா தன் மனசில இருக்கிறதை ஒரு தடவையாவது அவன் நம்ம கிட்ட சொல்லி இருக்க வேண்டாமா? நானே அந்த பிள்ளையை கடத்தி வந்து கட்டி வச்சிருக்க மாட்டேனா? ஏன் நம்ம ஆத்தா, பாட்டில்லாம் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கலை? இவங்க சென்னைல வந்ததும் பெரிய ### ஆகிட்டானுங்களாமா?”, கெட்ட வார்த்தைகள் சராமாரியாக பொழிந்தான்.
“….”
“அவனுக்குத்தான் பிடிச்சிருக்குன்னு சொன்னானே, உடனே கட்டி வச்சிருந்தா என்னவாம், இப்ப இவனுங்க சின்னத்தனத்தாலே அவன் உசிரே போச்சேடா…”
தலையில் அறைந்துக் கொண்டான்.


Leave a Reply