அத்தியாயம் 16_நிறைவுப் பகுதி_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 16
அரங்கநாதனும், சந்திரனும் உள்ளே செல்வதா? வெளியே செல்வதா என திகைத்து விழித்தனர். குண்டுச் சத்தத்தில் எழுந்து ஓடிய புரோகிதரின் கால் பட்டு சுந்தரின் போட்டோவும், அஸ்தியும் திசைக்கொன்றாக கிடந்தன. உள்ளே இருந்த வேலைக்கார பெண்ணும் வெடவெட என்று நடுங்கியவளாக உள்ளறைக்குள் சென்று மறைந்தாள்.
கீழே விழுந்திருந்த ரிஷா ,தட்டுத் தடுமாறி எழுந்து அமர்ந்தாள். குண்டு சப்தம், அரங்கநாதன் மற்றும் சந்திரனின் தடுமாற்றம் எல்லாம் பார்த்தால் அவர்களுக்கு எதிராக, அதாவது தனக்கு உதவுவதற்காக யாரோ வந்திருக்கிறார்கள் போலும், எழும்பி நிற்க முயன்றாள். தலைச்சுற்றியது சுவரைப் பற்றிக் கொண்டாள்.
“அவளைப் பிடிச்சு இருத்துடா…”, தம்பியிடம் சொல்லி விட்டு அரங்கநாதன் வெளிவாசலுக்கு என்ன சப்தம் என பார்க்க ஓட,
“ம்ம்…”, என உறுமியவனாக சந்திரன் எதிரில் நின்றான்,
“அது யார் வந்தாலும் சரி, உன்னை இன்னிக்கு பொலி போடறது என்னவோ உண்மைதான். உக்காருடி…என் தம்பியைக் கட்டிட்டு பரலோகம் போ…” மிருகமாய் இரைந்தான்.
“…”
“உன்னைக் கொல்லுறதுக்கு எவ்வளவு நேரமாகும்னு நினைச்ச? குட்டி குருவி மாதிரி இருந்துட்டு எங்க கிட்டயே பாச்சா காண்பிக்கிறியா?”
“…”
“பாந்திரா ஸ்டேஷன்லயே உன்னை தூக்கிருக்க வேண்டியது, கால்ல சுட்டு முடமாவாவது தூக்கிட்டு வாங்கடா, கொன்னுராதீங்க. செய்ய வேண்டிய சாங்கியம் மீதி இருக்குன்னு சொல்லி அனுப்பிச்சிருந்தோம் இல்லைன்னா அன்னிக்கே நீ காலி…. நீ பெரிய ####..@@@” கெட்ட வார்த்தைகள் தொடர்ந்தன.
சந்திரன் ரிஷாவை அந்த ஹோம குண்டத்தின் முன் கட்டாயமாக அமர்த்தினான். அவனது பலத்திற்கு முன்பாக தான் ஒன்றுமே செய்ய மாட்டாதவளாக அமர்ந்தவள் உக்கிரமாக
“நன்றிக் கெட்ட நாய்ங்களா, நான் ஏன்டா சாகணும்?, நீங்க சாவுங்கடா”
என்றவளாக உக்கிரமாக அந்த ஹோமக் குண்டத்தை சந்திரனின் மேல் தள்ளி விட்டாள். எதிர்பாராத நேரம் நிகழ்ந்த அந்த தாக்குதலில் தீக்கங்குகள் உடலெங்கும் பரவ, குனிந்திருந்ததால் முகத்திலும் பட்டிருக்க வலியில் துடித்தான் சந்திரன்.
“அம்மா…”
தீனமாய் அவன் அலற, அரங்கநாதனை பின்னால் இருந்து கைகளை முறுக்கியவராக இழுத்துக் கொண்டு உள்ளே வந்தான் அந்த சீருடை அணிந்தவன். ஜீஹீ பீச்சில் பார்த்த அந்த வாட்ட சாட்டமான ஐவருள் ஒருவன்.
‘இவன் எங்கே இப்போது?’ என ரிஷா எண்ணும் போதே அவள் கண் முன்னே சந்திரனை வந்து பாய்ந்து இன்னொருவன் பற்றிக் கொண்டான்.


Leave a Reply