அனைவரும் பலக் கதைகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, “அடுத்து என்ன தம்பி?” என்றார் சண்முகம்…
அவர் எண்ணம் புரிந்ததனால் இடைமறித்தார் செல்வி,
“இவர் எப்பவும் இப்படித்தான் தம்பி, தன் அக்கா பிள்ளைங்கன்னு உயிரையே விட்டுருவார். இப்ப இவ்வளவு நடந்தும் அவங்களோட நலம் விசாரிக்கிறதை பார்த்தீங்களா?
“அந்த தீபாவளி அன்னிக்கு சுந்தர் நடந்துக்கிட்ட முறையைப் பார்த்து அப்பவே ஊருக்கு அனுப்பி வைச்சிடச் சொன்னேன், இவர் கேட்கவே இல்லை. அதுக்கப்புறமும் எத்தனை முறை சொல்லி இருப்பேன் சரி ஆகிடும், சரி ஆகிடும்னு சொல்லி, கடைசில அவன் செத்து, கொலைப்பழியில தான் வந்து நின்னுச்சு.”
“இவரோட அக்கா பிள்ளைங்க, அக்கா பிள்ளைங்கன்னு பார்த்து தன்னோட பிள்ளையை கண்காணாத இடத்தில விட்டுட்டு, இரவும் பகலும் கண்ணீர் வடிச்சிட்டு இருந்தது எனக்குத்தான் தெரியும், அதுக்கப்புறமாவது அவனுங்க வெறி அடங்குச்சா? இல்லியே என் பிள்ளை உயிரையே இழக்கப் பார்த்தாச்சு… ஒவ்வொரு நாளும் அந்த இருட்டறையில வந்து, உங்க மகளை கண்டந்துண்டமா வெட்டி உன் முன்னால போடுறேன்னு தான் மிரட்டிட்டுப் போவான். அப்படி இருந்தும் இவர் அவங்க எல்லோர் நலத்தையும் விசாரிக்கிறதை பார்க்கிறீங்கள்ல…”
“நீர் போவும் ஐயா அவங்களையே கட்டிட்டு அழும். நான் போறேன் என் மகளை கூட்டிட்டு எங்க ஊருக்கு, உம்ம கூட குடும்பம் நடத்த என்னால முடியாது…”
செல்வி கட்டுப்பாடின்றி வெடித்து சிதறிவிட்டார், சண்முகம் மனைவியின் கோபத்தில் ஆடிப் போய் விட்டார். நான் அப்படி கேட்கலை செல்வி, என்னென்னவோ சொல்லிப் பார்த்தார்.
அம்மா நம்ம விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம், அம்மாவின் கண்ணீரை துடைத்தவாறு அவரை அமரச் செய்தாள் ரிஷா.
சற்று நேரம் அமைதியில் கழிந்தது. ரிஷி தொடர்ந்தான்…. “உங்களை எங்கே மறைச்சு வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க மும்பை போலீஸ் அவங்க மேல தர்ட் டிகிரி வரைக்கும் யூஸ் செய்ய வேண்டியதாச்சு, அதுக்கப்புறம் இங்கே அரங்கநாதன் வீட்டு அண்டர் கிரவுண்டில் உங்களை கண்டு பிடிச்சோம்.”
“உண்மையிலேயே அந்த வீட்டில் இப்படி ஒரு அமைப்பு இருக்கும்னு யாருமே நம்ப முடியாது. அவ்வளவு கனகச்சிதமாக அறை கட்டி இருந்தாங்க. போலீஸே வியந்து போயிட்டாங்கன்னு பாருங்களேன். அரங்கநாதன், சந்திரன் மனைவிகளும் மைதிலியும் இதில் கூட்டு என்பதால் அவங்களும் கஸ்டடியில் எடுத்து இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஊரில் உள்ள தாத்தா பாட்டி வசம் ஒப்படைச்சாச்சு.”
“இனி கேஸ் நடக்கும், எல்லா ஆதாரங்களும் இருப்பதால் அவங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்னு நம்பறோம்.”
“அப்படியெல்லாம் தண்டனை கிடைக்க விட மாட்டார் தம்பி, இவரே ஜாமீன் எடுத்திடுவார்…” கணவனை முறைத்தார் செல்வி.
செல்விம்மா அண்ணன் பேச்சை கேட்பல்ல, ருத்ரபாண்டி இடையில் தலையிடவும் செல்வி அமைதியானார். இப்போது அவர் சண்முகத்திடம் திரும்பினார்.
“நல்லவனா இருக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்கு சண்முகம், நீ உன்னோட கடமைகளை செய்த, அவங்களை உயர்த்தி விட்ட, ஆனா அவங்க செஞ்ச பழி பாவங்களுக்கும் நீ முன்னால நின்னு உதவணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு.”
“நான் அப்படி நினைக்கலடா ருத்ரா…”
“நீ அப்படி நினைக்கலைன்னா சரிதான், நினைச்சிறக் கூடாதுன்னுதான் நான் அறிவுரை சொல்றேன்.”
“உன்னோட இரக்க சுபாவத்தினாலத்தான் உன் மகளை ஏழெட்டு வருஷமாய் பிரிஞ்சு இருந்த, அன்னிக்கு நாங்க அங்கே போகலைன்னா திக்கு தெரியாம நின்ன உன் பொண்ணு அவனுங்க திட்டம் போட்ட மாதிரியே கண்டந்துண்டமா தான் கிடந்திருப்பா… அதை மட்டும் மனசில வச்சுக்க. என்ன புரியுதா?”
“சரி நாங்க போய் வர்றோம், கொஞ்சம் தூங்கி எழும்பணும்…”
என்றவாறு கனகவேலையும் அழைத்துக் கொண்டு சென்றவர் வாயிலில் நின்று ரிஷாவை அழைத்தார்.


Leave a Reply