மற்றொருவன் வந்து உள்ளேச் சென்று வேலைக்கார பெண்ணையும், புரோகிதரையும் இழுத்து வந்தான்.
“வெளியே வா மகளே…”
கனிவான அந்த குரலின் ஈர்ப்பில் மெதுவாக அங்கிருந்து வெளியெ நோக்கி நடந்தாள் அவள்.
“ஏய் உன்னையை கொல்லாம விட மாட்டேன்டி”, அரங்கநாதன் கையில் கிடைத்தும் தவற விட்ட இரையைப் பார்த்து கர்ஜிப்பது போல ரிஷாவைப் பார்த்து இரைந்தான்.
அவன் முகத்திலேயே தடியன் ஒரு குத்து விட மயங்கிச் சரிந்தான். சந்திரனோ தீக்கங்குகள் கொடுத்த வலியில் தொடர்ந்து அலறிக் கொண்டு இருந்தான்.
வெளியே வந்தாள் ரிஷா, அங்கு காவலுக்கு இருந்த சில தடியன்கள் பின்னால் கைகள் கட்டப் பட்டு, குப்பைப் போல துவைத்துப் போடப் பட்டிருந்தனர். அவர்கள் முனகல் தீனமாய் கேட்டுக் கொண்டிருந்தது.
“பயப்படாதே, இங்கே வாம்மா”
என்று கை விரித்து வாத்சல்யத்துடன் அழைத்துக் கொண்டு இருந்தவர் ருத்ரபாண்டி.
இவரையா தவறாக எண்ணினோம்? மனம் உடல் அயர்ந்து இருக்க, சோர்வாகவே நடந்துச் சென்று அவரிடம் போய் நின்றாள்.
“வா மகளே, உனக்கொன்னும் இல்லையே?” கேட்டவருக்கு தலையை அசைத்து இல்லையென பதில் கூற, அவள் தலையை வருடினார்.
“நீ அன்னிக்கே அந்தேரியில் என் கூட வந்திருந்தால் இத்தனை பிரச்சனை இருந்திருக்காது இல்லையா?” எனக் கேட்க, பதில் சொல்லாமல் அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
வெளியில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து அவசரமாய் இறங்கியவர்கள் ரிஷியும், இந்தரும்.
அவர்களைக் கண்டதும் அவள் மனதிற்குள் மகிழ்ச்சி.
“இந்தர் … நான் இன்னும் உயிரோட இருக்கேன்டா …”
ரிஷா உற்சாகத்தில் கூவினாள். தான் முதல் நாள் பார்த்ததை விடவும் சோர்ந்துப் போய் இருந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்த இந்தர் அவனைக் கண்டதும் அவள் எழுப்பிய உற்சாகக் குரலுக்கு புன்னகைத்தான்.
போலீஸ் உள்ளேச் சென்று ஒவ்வொருவராக இழுத்துக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றினர். ரிஷி போலீஸிடம் ஏதோச் சொல்ல, அரங்கநாதனிடமும், சந்திரனிடமும் தேடி வித்தியாசமான போனை மீட்டெடுத்தனர். அது சாடிலைட் போன்.
ரிஷாவிடம் வந்த ரிஷி, ருத்ரபாண்டியிடம்…
“நீங்க அனுமதி தரணும்”, என ஆங்கிலத்தில் இயம்பியவனாக, அவள் பின்னாகச் சென்று அவன் ஒட்டி வைத்திருந்த (அப்படியே ரீவைண்ட் போனீங்கன்னா ரிஷி ஆபீஸ்லருந்து புறப்படுறப்போ காதல் வசனம் பேசி ரிஷி ரிஷா மேல பாய்ந்த சீன் உங்களுக்கு நியாபகம் வருதா? இது அப்ப ஒட்டினது) அந்த தாள் போன்ற மெல்லிய கருவியை எடுத்தான்.
ஒன்றும் புரியாதவளாக ரிஷா பார்த்துக் கொண்டிருக்க, “வா முதல்ல நாம எல்லோரும் இங்கே இருந்து முதலில் போகலாம், அப்புறம் விபரம் சொல்லுறேன். உன் அம்மா, அப்பாவை மீட்க வேணாமா?”
அவசரமாக தலையை ஆட்டி ஆமென்றாள் ரிஷா.
ஒவ்வொரு வண்டியாக புறப்பட்டுச் சென்றது
அந்த அத்துவானக் காட்டிலே, ஆளண்டா வீட்டிலே, அறையினுள்ளே அநாதரவாக கிடந்தது சுந்தரின் அஸ்தியும், மாலையிட்ட புகைப்படமும்.
**********************


Leave a Reply