அப்பா சொன்னது போல சாயங்காலம் வந்த கெஸ்டைப் பார்த்தவள் அயர்ந்தாள், சிறுப்பெண் போல மாடர்ன் மங்கையாக ப்ரீ ஹேரில் ஸ்டைலாக தன் காரில் வந்து இறங்கியவர் வேறு யாருமல்ல ஷாரதாவே தான்.

“வாங்க”, திக்கினாள் ரிஷா.
“என்னப் பொண்ணே, திக்குது. முன்னை மாதிரி மனசில திட்டறது எல்லாம் இல்லையா என்ன?” கண்ணடித்து சிரித்தார்.
“இல்லை ஆண்டி, நான் அப்படி கூப்பிடலாம்ல…” சந்தேகமாய் கேட்க…
“கூப்பிடலாமே”, உள்ளே வந்தவரை ரிஷாவின் பெற்றோர் இருவரும் வரவேற்க,
“பொதுவா, க்ளையண்ட் வீடுகளுக்கு நாங்க போகிறது இல்லை. உன்னைப் பார்க்கணும்னே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி வந்தேன்”, அவள் கன்னத்தில் தட்டினார்.
அருகில் அமர்ந்தவள் அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். “நிழலின் அருமை வெயிலில் தெரியும்னு சொன்னது எவ்வளவு சரி. அது போலத்தான் மும்பையில் ஒவ்வொரு இடமா தன்னந்தனிமையிலே என் உயிரைக் காப்பாத்திக்க நான் ஓடினபோது உங்களோட அருமையை உணர்ந்துக்கிட்டேன்.”
‘பச்சக்’ என அவரது கன்னத்தில் முத்தமிட்டாள். ஷாரதாவின் இரும்பு முகத்திலும் புன்னகை விரிந்தது. இரவு சாப்பாடு அவரோடு கழிய விடைபெறும் போது குட்டியாக ஒரு பரிசை அவள் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்.
கையிலிருந்த அந்த குட்டி பொம்மையை பார்த்து ரசித்துக் கொண்டே பின் தொடர, மாடிக்கு படி ஏறினர் மூவரும். பாயை விரித்து அமர்ந்திருந்த அப்பாவின் மடியில் படுத்து வானத்தின் நட்சத்திரங்களை எண்ணினாள் ரிஷா.
டார்ஜிலிங்கில் இருக்கும் போதும் வானத்தைப் பார்த்து ஏங்கியவாறு இப்படித்தானே எண்ணிக் கொண்டிருப்பாள். தான் ஆசைப்பட்ட வாழ்க்கை, தன் பெற்றோரோடு கொண்டாடும் இவ்வாழ்க்கை கண்கள் மூடி இறைவனுக்கு நன்றிகள் சொன்னாள்.
“பாப்பா…” தயங்கியவாறு செல்வி அழைத்தார்.
‘இதை இதை இதைத்தானே எதிர்பார்த்தேன்’ என எண்ணியவளாய் புன்முறுவலோடு எழுந்து அமர்ந்தாள் ரிஷா.
“என்னம்மா?”
“இல்லை உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நானும், அப்பாவும் பேசிக்கிட்டு இருந்தோம்…”
“எல்லோரும் ஒரு கல்யாணம் தான் செஞ்சுப்பாங்க, பின்ன 10 கல்யாணமா செஞ்சுப்பாங்க?”
என்றதும் செல்வி முகம் வாட, சண்முகம்
“என்ன பாப்பா? நாங்க உனக்கு நல்லதுக்குத்தான சொல்லுவோம், நீ இப்படி பேசினா எப்படி? அம்மா முகத்தைப் பாரு…”
“நீங்க தானே செய்வீங்க, செய்வீங்க… என் கல்லூரி படிப்பே இன்னும் முடியலை, அதுக்குள்ள எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து, கல்யாணம் கட்டி அனுப்பிச்சு வைக்க முயற்சி செஞ்சவங்க தானே நீங்க? நானே எப்ப உங்க கூட எல்லாம் சேர்ந்து இருக்கலாம்னு கனவு கண்டுட்டு இருந்தா, ஷாரதா ஆண்டிக்கு எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை போட்டோ அனுப்பி வச்சிருக்கீங்க. நான் ஏற்கெனவே உங்க ரெண்டு பேர் மேலயும் கொலைவெறில இருக்கேன் சீண்டாதீங்க…”, பொருமினாள்.
“அப்படி இல்ல பாப்பா, உனக்கொரு கெடுதல் நிகழாம பார்த்துக்கணும்னா பத்திரமான கைகள்ல ஒப்படைக்கணும்னு பார்த்தோம்.”, மகளின் தலையை வருடினார் செல்வி.
“எத்தனை முறை கேட்டிருப்பேன்? ஒரு முறையாவது பதில் சொல்லி இருப்பீங்களா? மும்பையில அந்த தெரியாத நகரத்தில என்னென்னே புரியாம ஓடின ஓட்டத்தில உங்களுக்கும் பங்கிருக்கு. ஒன்னு முதல்லயே எதையும் எதிர்கொள்ளுற மாதிரி என்னை வளர்த்திருக்கணும் இல்லை இதுதான் பிரச்சனைன்னு அப்ப ஆரம்பத்தில சொல்லா விட்டாலும் அதுக்கப்புறமாவது சொல்லி இருக்கணும். ஒன்னுமே செய்யலை…”
செல்வி அமைதி காக்கவும்…
“எனக்கு புரியுதும்மா, அப்பா வருத்தப் பட்டிறக் கூடாதுன்னு நீங்க அவங்க சொந்தங்களை குறைச்சுப் பேச விரும்பலை. ஆனா, அப்பா? அவங்களாவது சொன்னாங்களா? இல்லையே? அப்ப உங்களுக்கும் என்னை விட அவங்கதான் பெரிசா?”
“இல்லைடா இல்லவே இல்லை, நீ அப்படி பேசாதே”, மகளை தடுத்தார் சண்முகம்.


Leave a Reply