“என்ன இருந்தாலும் நான் அவங்களை கேட்காமல் அவங்க உடன்பிறப்போட உடலை தகனம் செய்ய வைத்தது தவறு என்கிற குற்ற உணர்ச்சி தான்மா எல்லாத்துக்கும் காரணம்”, என உடைந்தவரை தேற்றினாள் ரிஷா.
அழகாக ஆரம்பித்த பேச்சு இப்படி மாறியது அவளுக்கும் விருப்பம் இல்லை.
“அம்மா, அப்பா நான் என் மனசில இருந்த ஆதங்கத்தை கொட்டிட்டேன். உங்களை கஷ்டப் படுத்தினதுக்கு மன்னிச்சுக்கோங்க. இப்ப நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ அதை இப்ப சொல்லுங்க கேட்கிறேன்.”
மறுபடி உற்சாகமான செல்வி “இல்ல பார்க்கிறதுக்கு லட்சணமாகவும் இருக்கு, வேலையும் திறமைசாலி, அந்த ரிஷி தம்பியை உனக்கு கேட்கலாமான்னு நாங்க ரெண்டு பேரும் நினைச்சோம்.”
“ஓ அது ரொம்ப கஷ்டம்…”
“ஏன் பாப்பா?”
“அனுமதி தர மாட்டாங்க அம்மா?”
“உனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லு, நாங்க உனக்காக போயி அவங்க அம்மா அப்பா கிட்ட போயி பேசறோம்.”
“நீங்க பேச வேண்டியது அவங்க அம்மா, அப்பாக்கிட்ட இல்ல.”
“பின்னே…?”
“அவங்க மனைவி கிட்டே”, விழுந்து விழுந்து சிரித்தாள்.
அவள் தான் ரிஷி தன் மனைவியோடு இருந்த படத்தை அவன் டேபிளில் கண்டிருந்தாளே.
சண்முகமும், செல்வியும் அசடு வழிந்தனர்.
“அடுத்ததா இந்தர் பேரை சொல்லிடாதீங்க என் தெய்வங்களே” கைக் கூப்பினாள்.
“அவன் என் பிரெண்ட் மட்டும் தான், புரிஞ்சதா ஓகே…”
“சரி”, என இருவரும் சிரித்தவாறே தலையசைத்தனர்.
“நான் நிச்சயமா கல்யாணம் செஞ்சுக்கத்தான் போறேன் ஆனா இப்ப இல்ல, முதல்ல படிப்பை முடிக்கணும், சுதந்திரமா வாழ்க்கையை அனுபவிக்கணும். கராத்தே, ஜீடோன்னு எல்லாம் கத்துக்கணும். வெளி உலகம் பார்த்து வாழ்க்கையை எப்படி வாழணும்னு புரிஞ்சிக்கணும். உலக நாடுகள் எல்லாம் சுத்திப் பார்க்கணும். உங்களோட வாழாத இத்தனை வருஷத்து வாழ்க்கையும், சேர்ந்து வாழ்ந்து ஈடுகட்டணும்… அதுக்கப்புறமா எந்த இளிச்சவாயன் மாட்டினாலும் சரி கட்டிக்க வேண்டியதுதான்.”
“அடிங்க வாயைப் பாரு…” அதட்டினார் செல்வி,
“நீ சும்மா இரு செல்வி”, மகளுக்கு பரிந்து பேசினார் சண்முகம்.
“உங்களுக்கு மகளுக்கு செல்லம் கொஞ்சறதே வேலை, கண்டிக்க விட்டுறாதீங்க…” சிணுங்கிக் கொண்டார் செல்வி.
அம்மா அப்பா மடியில் நீண்டு படுத்துக் கொண்டு வானை நோக்கி கத்தினாள் ரிஷா..
“ஏ குட்டி நட்சத்திரம்… நான் அன்னிக்கு உன் கிட்ட சொன்னேன்ல… இதோ பாரு என் அம்மா, இதோ பாரு என் அப்பா … நான் இவங்க கூடத்தான் இனி இருக்கப் போறேன் யிப்பீ…. ஊ…”,வென உற்சாகக் குரல் எழுப்பினாள்.
அந்நட்சத்திரம் அவளை நோக்கி மின்னி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டது. மேகங்கள் அதனை மறைத்து நகர்ந்துச் செல்ல மறுபடியும் நட்சத்திரம் அவள் கண்களுக்கு தென்பட்டது முத்தம் ஒன்றை அதற்கு அனுப்பி வைக்க அவள் மகிழ்ச்சியில் அந்நட்சத்திரம் மட்டுமல்ல பிரபஞ்சமே மகிழ்வுக் கொண்டது.
சுபம்


Leave a Reply