கனகவேல் காருக்குச் செல்ல, “இதோ வரேன்டா”, என கையைக் காட்டிவிட்டு ரிஷாவிடம் பேசலானார்.
“நீ என்னைக் கண்டு எதுக்கு பயந்தன்னு எனக்கு அப்புறமாதான் புரிஞ்சது ரிஷாமா. கனகவேல் மகன் இறந்தது ஏதேச்சையாத்தான், அவனை நான் கொல்லலை, ஆழம் தெரியாம அந்த குட்டையில் விழுந்திருக்கான். அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் அவனை காப்பாத்த முடியலை.”
“@அப்ப என் நேரம் சரியில்லாம கம்பெனி பணத்தில நான் கை வைக்க வேண்டியதா போச்சு. நான் பணத்தை பார்ட்னர்கள் கிட்டே சொல்லி எடுத்திருக்கணும், அதை செய்யலை அதுதான் நான் செஞ்ச ஒரே தப்பு. நாம திரும்ப போட்டிருவோமேன்னு அலட்சியத்தில் எடுத்தது என்னோட பேரை நாசமாக்கிடுச்சு. அந்த பிரச்சனைக்கு அப்புறமா நான் பணத்தை கட்டிட்டேன். கனகவேலும் என்னைப் பற்றி புரிஞ்சுக்கிட்டான். கேஸை வாபஸ் வாங்கிட்டான். நாங்க எல்லாம் பல கால நண்பர்கள்மா. ஒருத்தர் பிள்ளையை இன்னொருத்தர் கொல்ல மனசு வருமா? அதுவும் பாழாப்போன அந்த பணத்துக்காக? மாமாவை நம்பறீல்ல…”
கேட்டவரிடம் ஆமாம் என தலையசைத்தாள், புன்னகைத்தவாறு விடைப்பெற்றுச் சென்று விட்டார்.
“தம்பி.. உங்களுக்கான பீஸ் எவ்வளவுன்னு நான் சொல்லறது முறை இல்லை. என் உயிரையே காப்பாத்திக் கொண்டு வந்திருக்கீங்க”, என்றவாறு வெற்று செக்கில் கையொப்பமிட்டுக் கொடுக்க,
அவர் எதிர்பார்த்தவாறு “எதற்கு பணம்?” என்றெல்லாம் சொல்லாமல் தன்னிடம் ஏற்கெனவே இருந்த பில்லை அவருக்கு கொடுத்தான் ரிஷி.
அதில் இருந்த பெரும் தொகையை செக்கில் நிரப்பி அவருக்கு காட்டினான். “என்னோட சார்ஜ் மட்டும் தான் சார். என் வேலையை திருப்திகரமா முடிச்சது எனக்கு திருப்தி. நன்றிங்க சார் சாயங்காலம் ப்ளைட், இப்ப புறப்பட்டாதான் சரியா இருக்கும்”, என்று விடைப்பெற்றுச் சென்றான்.
இந்தர் அமர்ந்திருக்க, “அப்பா இப்ப சொல்லுங்க”,என்றாள் ரிஷா.
“இந்தர் தம்பி திசை தெரியாத இடத்தில என் மகளுக்கு உதவியா இருந்திருக்கீங்க உங்களுக்கு முதல்ல நன்றியை சொல்லிக்கிறேன்.”
“நீங்க இப்ப வேலையில் இல்லைன்னு ரிஷாதான் சொன்னா, உங்களோட நேர்மை குறித்தும் கூட சொன்னா. உங்களுக்கு விருப்பம் இருந்தா என் கம்பெனில வேலைப் போட்டுத் தாரேன். எங்களுக்கும் கம்பெனிக்கு வக்கீல் ஒருத்தர் இப்ப தேவைதான்.”
“உங்களுக்கு உங்க பிரச்சனைகள் தீரும் மட்டும் அல்லது வேற வேலை கிடைக்கும் மட்டும் இங்கே வேலைப் பார்த்தா போதும். இங்கேயே தான் இருக்கணும்னு நான் கட்டாயப் படுத்த மாட்டேன். மத்த எம்ப்ளாயீஸ் மாதிரிதான் உங்களையும் நடத்துவேன். உங்களோட தன்மானத்தை பாதிக்கிற மாதிரி எதுவும் நடக்காதுன்னு உறுதி கொடுக்கிறேன், என்ன சொல்லுறீங்க?”
“ரிஷா இல்லைங்க சார், அது யாரா இருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேன். அதுக்காக வேலையெல்லாம் அதிகம், நீங்க சொல்லுறதைப் பார்த்தா எனக்கு இது ஒரு நல்ல ஆபர் தான். ஆனாலும், யோசிச்சு சொல்லுறேன் சார்”,பதிலிருத்தான் இந்தர்.
சிறிது நேரம் அளவளாவி விட்டு இந்தரும் விடைப்பெற்றுச் செல்ல அதுவரை அமைதியாக இருந்த செல்வி முகத்தை தூக்கிக் கொண்டு உள்ளறைக்குச் சென்றார்.
“சாயங்காலம் ஒரு கெஸ்ட் வராங்க பாப்பா”, என்று மகளிடம் கூறிய சண்முகம் மனைவியை சமாதானப் படுத்த அவசரமாய் தன் அறைக்குள் நுழைந்தார்.
அம்மாவின் கோபம், ஊடலைப் பார்த்தவள் சிரித்தவாறு தன் அறைக்குச் சென்று படுக்கையில் சரிந்தாள். இரண்டு பேரும் சமாதானம் ஆனால் நம்ம கிட்ட தான் புதுசா பிரச்சனையைக் கொண்டுட்டு வருவாங்க, நாம இப்ப ரெஸ்ட் எடுப்போம், என்றவளாக கண் அயர்ந்தாள்.
சாயங்காலம் செல்வியும், சண்முகமும் மலர்ந்த முகமாக இருந்தனர். ‘அப்பா, அம்மாவை சமாதானப் படுத்திட்டார் போலிருக்கே?’ வெளியே சொல்லாவிட்டாலும் மனதிற்குள்ளாக எண்ணி நகைத்துக் கொண்டாள்.


Leave a Reply