“சரி அதை விடுங்க, அன்னிக்கு என்ன நடந்தது அதை மட்டும் முதலில் சொல்லிடறேன். சில நாட்கள் முன்பு திடீரென சண்முகம் கார்மெண்டுக்கு வரலை, போன் தகவலும் இல்லை. ஓரிரண்டு நாட்கள் ஆகவும் நான் வீட்டில் நலம் விசாரிக்க வந்தேன். வீடும் பூட்டி இருந்தது, ஏதோ தவறாக மனதிற்கு தோன்றிச்சு. சற்று தள்ளி இருந்த அரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று அவன் மனைவியிடம் விசாரித்தேன். அந்த பெண் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று முகத்தை வெட்டியவாறு பதில் சொன்னாள்.”
“அவள் முகத்தில் இருந்த மிரட்சி, பயம் அவர்களைக் காட்டிக் கொடுத்தது என்றாலும் என்னவென்று கணிக்க முடியலை. முதலில் ஏதோ தவறாக நடந்திருக்கும் என்று நினைத்தேன் தான் ஆனாலும், சண்முகம் முன்பொரு முறை என்னிடம், ’மும்பையில் ரிஷாவிற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளையை ஒருமுறை சந்தித்து வரவேண்டும்’ எனச் சொன்னதை நினைவில் கொண்டேன்.”
“எனக்கு சண்முகம் எங்கே சென்றிருப்பான் என்று உடனே அறிந்துக் கொள்ளத் தோன்றியது. உடனே மும்பை புறப்பட்டேன். அந்த பிரபாகர் விலாசம் சென்றுப் பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி யாரும் இல்லை என சொல்லி விட்டனர், திரும்ப வந்து ஊருக்கு வண்டி ஏற வரும் போதுதான் ரிஷா பாப்பாவை பார்த்தேன்.”
“அவளோ என்னைப் பார்த்து ஓடி ஒரு பஸ்ஸில் ஏறி விட்டாள்.”
ருத்ரபாண்டி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ரிஷாவிற்கு தன்னுடைய அந்த நாள் பதட்டம் ஞாபகம் வந்தது, அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தொடர்ந்துக் கேட்டாள்.
“வேறு வழியில்லாமல் எனக்கு தெரிந்த செக்யூரிட்டி கார்டுகளிடம் உடனே தகவல் தெரிவித்து அந்த பஸ் எந்த ஸ்டாப்பிங்க் எல்லாம் நிற்குமோ அங்கே எல்லாம் சென்று தேடச் சொல்லி ரிஷா சின்னப் பிள்ளையாக இருந்த போது என்னிடமிருந்த போட்டோவை அவர்களிடம் பகிர்ந்து இருந்தேன்.”
“ஓ…இதுதான் அந்த ஐந்து தடியர்கள் தன்னைச் சுற்றி நின்றதன் காரணமோ? ரிஷாவின் கண்கள் விரிந்தன. ரிஷாவை ஜீஹீ பீச்சில் கண்டு பிடித்து இருந்தாலும் கூட அது அவள்தானா என்று நான் அடையாளம் காட்ட வரும் வரை அவளைச் சுற்றி இவர்கள் நிற்க, போலீஸ் வந்து ஏன்னு கேட்டிருக்காங்க. விபரம் சொல்ல முடியாம செக்யூரிட்டிகள் போலீஸ் கிட்டே பேசிட்டு இருக்க, ரிஷா இந்தர் கூட போய் சாப்பிட்டு, டாக்ஸி பிடிச்சு அங்கிருந்து புறப்பட்டுட்டா…”
“ஓ அந்த துப்பாக்கிச் சூடு…” என முனகியவன் ஞாபகம் வந்ததும் இந்தர் கதி கலங்கினான்.
“அந்த கன் ஷீட் அங்கிள்…”
“அது உங்க டாக்ஸியை நிறுத்தறதுக்காகத்தான், உங்களை சுடறதுக்காக இல்லை”, என்றார்.
நெஞ்சில் கை வைத்து பின்னே சாய்ந்தான் இந்தர், அவனது பாவனைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.
“நீங்க அங்கிருந்து புரப்படவும் தான் நான் அங்கே வந்திருந்தேன், பிரதாப் அட்ரஸ் போய் பார்க்க போவீங்கன்னு மனசுக்கு தோணுச்சு, அதனால செக்யூரிட்டிகளிடம் அந்த அட்ரஸ் கொடுத்து விட்டேன், ஆனால் அங்கே இருந்தும் கூட நீங்க புறப்பட்டுட்டீங்க”
“மறுபடியும் உங்களுக்கு பயந்து தான் அங்கிள் அங்கிருந்து புறப்பட்டோம்”, சொல்லிவிட்டு முகத்தை அம்மாவின் தோளில் புதைத்துக் கொண்டாள் ரிஷா.


Leave a Reply