சில நாட்கள் கழித்து சென்னையில் ….
அந்த பங்களாவில் மணக்க, மணக்க சாப்பாடு தயாராகிக் கொண்டு இருந்தது.
அம்மாவின் வால் பிடித்துக் கொண்டு திரிந்தாள் ரிஷா… “அம்மா இன்னிக்கு என் பிரெண்ட் இந்தர் வரான், ரிஷி வராங்க…”
இறுக்க அணைத்து செல்விக்கு முத்தமிட்டாள் ரிஷா.
“அப்பாக்கு கண்ணம்மா…”
“இதோ…”, என்றவளாக ஓடிச் சென்று அப்பாவின் அருகில் அமர்ந்து அவர் கன்னங்களில் முத்தமிட்டாள்.
ரிஷாவுக்கு அடுத்தே அமர்ந்தார் செல்வி. தொலைக்கவிருந்த பொக்கிஷத்தைக் கண்டது போல மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள, மனதிலிருந்து எழுந்த நிம்மதியின் வெளிப்பாடாக அங்கு மூவர் கண்களில் இருந்தும் கண்ணீர் சுரந்தது.
“அடடே இங்கே நம்மை வரவேற்க யாரும் இல்லைப்பா, நாம திரும்ப போயிடலாம்…” குரல் கேட்க,
“உள்ளே வாங்க மாமா…”, அழைத்தவளாய் முன்னே சென்றவள் அப்படியே நின்றாள். ஏனென்றால், அவள் கேட்ட குரலோ ருத்ரபாண்டி அங்கிள் உடையது. ஆனால், அங்கே அவர் மட்டுமல்லாது அவரோடு கூட கனகவேல் அங்கிளும் வந்திருந்தார். இருவரும் சிரித்துக் கொண்டு நின்றிருந்தனர்.
“வாங்க, வாங்க”, இருவரையும் உள்ளே அழைத்தாள்.
அதே நேரம் வெளியில் ஏதோ சப்தம் கேட்க அவர்களைத் தாண்டி முன்னே வந்தவள் வாயிலுக்கு ஓடினாள்.
“வாடா இந்தர், வாங்க ரிஷி சர்”
தோழியின் அழைப்பில் மகிழ்ந்தவன் அவளோடு பல கதைகள் பேசி முன் செல்ல ரிஷி அமைதியாய் பின் தொடர்ந்தான்.
உள்ளே அவர்கள் சோபாக்களில் அமர, பணியாள் ஒருவன் வந்து அனைவருக்கும் குளிர்பானம் வழங்கிச் சென்றான். ரிஷா அமர செல்வியும் அருகில் அமர்ந்தார்.
“எல்லா பிரச்சனைகளும் நல்லபடியா தீர்ந்தது நம்ம ரிஷி தம்பியாலத்தான்”, ருத்ரபாண்டி சொல்ல,
கைக்கூப்பி வணங்கியவன், “நான் என் கடமையைத்தான் செஞ்சேன் சார், இதுக்கெல்லாம் பாராட்டாதீங்க”, என்றான் பணிவாக.
செல்வியும், சண்முகமும் ஏதோ கண்களால் பேசிக் கொண்டதை ரிஷா கவனித்தாள்.
“அப்புறம் எப்படி விஷயம் தெரிஞ்சது தம்பி?” எனக் கேட்க ரிஷி சொல்ல ஆரம்பித்தான்.
“நான் ரிஷாவை அவங்க கடத்திட்டு போகாமலிருக்க எல்லா முயற்சியும் செஞ்சு பார்த்தேன். ஆனால், முடியலை, அதனாலத்தான் அவ எங்கே போனாலும் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிற அந்த டிவைஸை அவ முதுகில ஒட்டிட்டேன்.”
அனைவரும் ஆவென வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர். என்னதான் டிவைஸ் மூலமா இடம் எங்கே இருக்குன்னு தெரிஞ்சாலும் கூட, போலீஸ் மூலமா போனா தான் நல்லதுன்னு நினைச்சதால அவங்க உதவி கேட்டு விபரம் சொல்லி, மேலிடத்திலிருந்து அனுமதி கிடைச்சு வர்றதுக்கு முன்னாடி முணு நாளாகிடுச்சு.
“என்னமோ ஏதோன்னு பதறிட்டு வந்தா நீங்க எங்களுக்கு முன்னாடி நிக்கிறீங்க, ரிஷா பத்திரமா உங்க பக்கத்தில நிக்கிறாங்க… அவங்களை முழுசா பார்த்ததும் தான் மனசே சரியாச்சு.”
மறுபடியும் செல்வி, சண்முகம் இருவரின் கண்களும் சந்தித்து மீண்டன.
“ம்ம்… நீங்க எப்படி சார் அவ்வளவு சீக்கிரமா அங்கே வந்து சேர்ந்தீங்க?” இப்போது பதில் சொல்வது ருத்ரபாண்டியின் முறையானது.
தொண்டையை செருமிக் கொண்டவர்… , “சண்முகத்துக்கும் அவனோட அக்கா பையனுங்களுக்கும் இடையே இருக்கிற இந்த பிரச்சனை தெரிஞ்ச மூணாவது ஆளு நான். அதாவது செல்வி, சண்முகம் தவிர்த்து இந்த விஷயம் வெளியாளான எனக்கு மட்டும் தான் தெரியும்.”
“அந்த இக்கட்டான சுந்தர் இறந்த நாளுக்கடுத்து நடந்த பெரும்பாலான விஷயத்துல ரிஷாப்பிள்ள டார்ஜிலிங்க்ல ஸ்கூல் சேருறதுக்கும், ஷாரதா என்கிற கார்ட் ஏற்பாடு செய்யறதுக்கும் நான் தான் ஏற்பாடு பண்ணினேன்.”
“கனகவேலுக்கும், எனக்கும் இருந்த பிணக்கு எல்லாம் தீர்ந்ததும் நாங்க மூணு பேருமே மறுபடி சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்திருந்தோம். ஆனால், கூடவே வேலை செய்துக் கொண்டிருந்த அரங்கநாதனையும், சந்திரனையும் கண்காணிச்சுக்கிட்டே இருந்தோம்.”
“நாளாவட்டத்தில் எங்களுக்கு வரவேண்டிய சில ஆர்டர்களை அரங்கநாதனே போய் பேசி, வாங்கி, தனியா கார்மெண்ட் நடத்தினாங்க. அதனால எங்களுக்கு நஷ்டம் தான். ஆனாலும், அப்படியாவது அவங்க கோபமும், வெறியும் தீரட்டும்னு சண்முகம் சொன்னதனால நாங்களும் பெரிது படுத்தாம விட்டுட்டோம். அவங்களும் நல்ல நிலைமைக்கு வந்தாங்க, அவங்க நினைச்சிருந்தா அந்த பணம் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி இருக்கலாம், பழி உணர்ச்சியால அவங்க அடைந்தது ஒன்னுமில்லை. ரிஷாவை தேடி அழிக்கணும் என்கிறதுக்காகவே அவர்கள் செலவழித்த தொகை கோடியைத் தாண்டும்…”
“ஓ…” ஆச்சரியத்தில் விரிந்தன சில கண்கள்.


Leave a Reply